For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போரில் 136 இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் அழிப்பு! ஹமாஸ் செய்தி தொடர்பாளர் அறிவிப்பு!

12:30 PM Nov 09, 2023 IST | Web Editor
போரில் 136 இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் அழிப்பு  ஹமாஸ் செய்தி தொடர்பாளர் அறிவிப்பு
Advertisement

போரில் 136 இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. 

Advertisement

காஸா பகுதியை ஆட்சிபுரியும் ஹமாஸ் அமைப்புக்கும்,  இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டு காலமாக பதற்றம் நிலவி வருகிறது.  இந்தப் பதற்றம் பலமுறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.  இந்தச் சூழலில், கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி ஹமாஸ் குழுவினர் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

ஹமாஸ் நடத்திய இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக அந்தப் பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம்,  கடந்த ஒரு மாதமாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.  அத்துடன், காஸாவுக்குள் உணவு, குடிநீா், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள் செல்வதற்குத் தடை விதித்து,  அந்தப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் முழுமையாக முற்றுகையிட்டுள்ளது.  ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல் ராணுவம், அதற்காக தரைவழியாக காஸாவுக்குள் படிப்படியாக தாக்குதல் நடத்தி முன்னேறி வருகிறது.

எனினும், காஸாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல் நடவடிக்கை மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று நிபுணா்கள் எச்சரித்து வருகின்றனா். அந்தப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினா் ரகசியமாக அமைத்துள்ள சுரங்க நிலைகள் இஸ்ரேல் ராணுவத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் எனவும், அந்த நிலைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் ராணுவத்துக்கு ஹமாஸ் அமைப்பு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் எனவும் அஞ்சப்பட்டது. இந்த நிலையில், காஸாவுக்குள் தாங்கள் நடத்தி வரும் தரைவழித் தாக்குதலில் 130 ஹமாஸ் சுரங்க நிலைகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

இந்நிலையில், 136 இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அபு ஓபைதா என்பவர் தெரிவித்துள்ளார்.

இருதரப்பும் தங்களது ராணுவ வெற்றியை அடுத்தடுத்து பறைசாற்றும் நிலையில், ஆயிர கணக்கில் உயிரிழந்து, உடமையிழந்து, உறவிழந்து தவித்துவருவது உலகெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Tags :
Advertisement