எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. அவர்கள் மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துவிடுவர். சில சமயங்களில் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும் உண்டு. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. இதற்கிடையே, கடந்த 25ம் தேதி இரவு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், குடியரசு தினமான நேற்று அதிகாலை 16 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்து 34 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் 13 பேர் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். தப்பிச் செல்ல முயற்சித்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் இரண்டு மீனவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.