திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இதுவரை 13 பேர் உயிரிழப்பு! - மாவட்ட ஆட்சியர் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகவும் இதுவரை 13 உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிச. 17, 18ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகவும் இதுவரை 13 உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
"கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு பேரிடர் நிவாரணம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்திட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்: சித்தார்த் குரலில் ‘உனக்குத்தான்’ பாடல் | வைரலாகும் வீடியோ பதிவு!
இதன்படி, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு தொகை ரூ.4 லட்சம், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் என ரூ. 5 லட்சம் வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட 8 வட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது."
இவ்வாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.