3 மாணவர்கள் உயிரிழப்பு எதிரொலி: Basement-களில் இயங்கிய 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு சீல்!
பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்ததன் எதிரொலியாக அடித்தளத்தில் இயங்கிய 13 ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களுக்கு டெல்லி மாநகராட்சி சீல் வைத்துள்ளது.
டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்கள் நீர்த்தேங்கி காணப்படுகிறது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் ரவு [RAU] ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு 7 மணியளவில் சுமார் 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது.
இதனைக் கண்டித்து பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன் மாணவர்கள் ஒன்று கூடி டெல்லி மாநகராட்சியைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை அடைப்பை அப்புறப்படுத்தாலேயே கட்டடத்துக்குள் நீர் புகுந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.இதனையடுத்து அப்பகுதியில் டெல்லி காவல்துறை மற்றும் அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் அடித்தளத்தில் இயங்கும் பயிற்சி மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி மாநகராட்சி மேயர் ஷெல்லி ஓபராய் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் கரோல் பாக் பகுதியில் சட்டவிரோதமாக அடித்தளத்தில் இயங்கி வந்த 13 பயற்சி மையங்களுக்கு டெல்லி மாநகராட்சி சீல் வைத்துள்ளது. சீல் வைக்கப்பட்ட பயிற்சி மையங்கள் பினவருமாறு..
- ஐஏஎஸ் குருகுல்
- சாஹல் அகாடமி
- புளூட்டஸ் அகாடமி
- சாய் டிரேடிங்
- ஐஏஎஸ் சேது
- டாப்பர்ஸ் அகாடமி
- டைனிக் சம்வத்
- சிவில்ஸ் டெய்லி ஐஏஎஸ்
- கேரியர் பவர்
- 99 நோட்ஸ்
- வித்யா குரு
- வழிகாட்டி ஐஏஎஸ்
- ஈஸி பார் ஐஏஎஸ்