சிறையிலிருந்து தப்ப முயற்சி - #Congo -வில் 129 கைதிகள் உயிரிழப்பு!
காங்கோவில் சிறையை உடைத்து கைதிகள் தப்ப முயன்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் உயிரிழந்தனர்.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவில் உள்ள முக்கிய சிறையான, மகலா மத்திய சிறையில் 120க்கும் மேற்பட்ட கைதிகள் உயிரிழந்துள்ளனர். மகலா மத்திய சிறையில் 1,500 கைதிகளை மட்டுமே அடைக்க வசதி உள்ளது. ஆனால் அங்கு 12,000க்கும் அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் விசாரணை கைதிகள். இந்நிலையில், கடந்த 1ம் தேதி நள்ளிரவு துவங்கி, நேற்று முன்தினம் காலை வரை இந்த சிறைக்குள் திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதால் பீதி ஏற்பட்டது. சத்தம் கேட்டு பொதுமக்கள் சிறையின் முன் கூடினர். அப்போது சிறை சுவரில் துளையிட்டு கைதிகள் தப்ப முயன்றது தெரியவந்தது. அவர்களை தடுக்கும் விதமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 24 கைதிகள் கொல்லப்பட்டனர்.
மற்றவர்கள் சலசலப்பு, கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர். பெண்கள் பலர் பாலியல் கொடுமையால் உயிரிழந்துள்ளனர். மேலும் 59 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக உள்துறை அமைச்சர் ஜாக்குமைன் ஷபானி லுகூ பிஹாங்கோ தெரிவித்துள்ளார்.