உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி! - பூச்செடிகளை காட்சிப்படுத்தும் பணிகள் தீவிரம்!
உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால், பூங்காவை சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து 3
லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.
இதையும் படியுங்கள் : பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் கட்சியிலிருந்து நீக்கம் – பிரதமர் மோடியை விமர்சித்ததால் நடவடிக்கை!
இந்த ஆண்டை பொறுத்தவரை, உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் 17ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதி வரை 6 நாட்கள் என 126 வது மலர் கண்காட்சி நடைபெறும் எனவும், அதேபோல் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64ஆவது பழக்கண்காட்சி மே 24ஆம் தேதி துவங்கி 26 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தாண்டு நடைபெறும் 126 வது மலர்க்கண்காட்சிக்காக 62 மலர் வகைகளில், 262 ரகங்களைக் கொண்ட 60,000 தொட்டிகளில் டேலியா, சால்வியா, கேண்டிடப்ட், ஜெனியா, பால்சம், அஜிரேட்டா உள்ளிட்ட ரகங்களில் மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு வந்தன. கண்ணாடி மாளிகை அருகே உள்ள புல்வெளி மைதானத்தை பராமரிக்க பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் 15,000 மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பூங்காவில் புல்வெளி மைதானங்களை சீரமைக்கும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்டமாக நடைபெற இருப்பதாலும், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோடை சீசனில் ஆண்டுதோறும் நடைபெறும் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சிகள் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பிறகே தேதிகள் அறிவிக்கப்படவுள்ளது.
ஆண்டுதோறும் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 3 முதல் 5 நாட்கள்
நடைபெறும் மலர்கண்காட்சியானது இந்த ஆண்டு 10 முதல் 12 நாட்கள் வரை நடைபெறும்
என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளிலும் பூங்கா நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.