சீனாவுக்கு 125% வரி விதிப்பு இன்று முதல் அமல் - அதிபர் டிரம்ப் உத்தரவு!
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அதன் பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே விகிதத்தில் பரஸ்பரமாக வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, கடந்த 2-ம் தேதி வரி விதிக்கப்படும் நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டார். இந்த வரி விதிப்பு நேற்று (ஏப்ரல் 9) முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்தார்.
இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்த நிலையில் சீன பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 20 சதவீத வரியுடன் கூடுதலாக 34 சதவீத வரி விதித்தார். அதற்கு சீனா பதிலடியாக, அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத வரி விதித்தது. அந்த வரியை 8-ம் தேதிக்குள் ரத்து செய்யாவிட்டால், சீன பொருட்கள் மீது மேலும் 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அந்த வரியை சீனா ரத்து செய்யவில்லை. இதனால் சீன பொருட்கள் மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.
இத்துடன், சீன பொருட்கள் மீதான மொத்த வரி 104 சதவீதமாக உயர்ந்தது. அமெரிக்காவுக்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்கள் மீது சீனா மேலும் 50 சதவீத வரி விதித்தது. இதன் காரணமாக அமெரிக்க பொருட்கள் மீதான சீனாவின் வரிவிதிப்பு 84 சதவீதமாக உயர்ந்தது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் என்ற அச்சம் எழுந்த நிலையில், திடீரென வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் சீனாவுக்கு மட்டும் விதி விலக்கு கிடையாது எனவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.