டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125கோடி பரிசு - பிசிசிஐ அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தது பிசிசிஐ அறிவித்துள்ளது.
20 அணிகள் பங்கேற்று விளையாடிய டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது. பார்படாஸில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் குவித்தார்.
தொடர் முழுவதுமே சரியாக விளையாடாத விராட் கோலி, இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். பின்னர் 177ரன்கள் இலக்கோடு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.
ஒருநாள் உலகக் கோப்பையை இழந்த ரோகித் சர்மா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காகவும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்காகவும் வென்று கொடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகான இந்தியாவின் இந்த வெற்றியால் நாடே ஆனந்த கண்ணீரில் மூழ்கியது. வெற்றியைத் தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் தங்களின் ஓய்வை ரோகித் சர்மா , விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தது பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனை பிசிசிஐ செயலாளார் ஜெய்ஷா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.