12000 ஆண்டுகள் பழமையான மனித மூளை - எங்கே கண்டறியப்பட்டது?
12000 ஆண்டுகள் பழமையான பாதுகாக்கப்பட்ட மனித மூளை கண்டுபிடிக்கப்பட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அது எங்கே கண்டியறிப்பட்டது விரிவாக பார்க்கலாம்.
100 வருடம் பழமையான கட்டடங்களை பார்த்திருப்போம். 1000 வருடங்கள் பழமையான பதப்படுத்தப்பட்ட மம்மி உடல்களை பற்றி ஏராளமான செய்திகளில் படித்திருப்போம். அவ்வளவு ஏங்க.. நம்ம தாய்த் தமிழ் மொழியே 2000 ஆண்டுகள் முந்தைய பழமையான மொழின்னு வரலாற்றுப்பூர்வமான ஆய்வுகள் உண்டு.
இந்த வரிசையில சமீபத்தில் 285 ஆண்டுகள் பழமையான எலுமிச்சைப் பழம் கண்டுபிடிக்கப்பட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த எலுமிச்சை பழத்தில் அது யாருக்கு யாரால் எந்த வருடம் என தெளிவாக எழுத்தப்பட்டதால் துல்லியமாக அதன் ஆண்டு 285 ஆண்டுகள் பழமையானது என கணக்கிடப்பட்டது.
இந்த வகையில் மேலும் ஆச்சர்யபடுத்தும் வகையில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் ஆய்வு முடிவுகள் வெளியாகி “வாவ்” என்று சொல்லும் அளவிற்கு ஆச்சர்யத்தை கிளப்பினாலும் விஞ்ஞானிகள் மத்தியில் சின்ன குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி... ஆச்சர்யத்தையும் குழப்பத்தையும் ஒருசேர தந்த செய்தி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...
உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அலெக்ஸாண்ட்ரா மார்டன்-ஹேவர்ட் தலைமையிலான ஆராய்ச்சி மையம் 12,000 ஆண்டுகள் பழமையான பாதுகாக்கப்பட்ட மூளை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் பதிவில் வியக்க வைக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட 4,400 க்கும் மேற்பட்ட மனித மூளைகளை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவற்றில் சில மூளைகள் 12,000 ஆண்டுகளுக்கு முந்தையவை.
மிகவும் அரிதான கண்டுபிடிப்புகள் என்று கருதப்பட்ட, பாதுகாக்கப்பட்ட மூளைகள் எகிப்திய பாலைவனங்கள் முதல் ஐரோப்பிய கரி சதுப்பு நிலங்கள் வரையிலான பகுதிகளில் இருந்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பொதுவாகவே ஒரு மனிதனின் உடலில் இருந்து உயிர் பிரியும்போது மூளைதான் மிகவும் விரைவாக சிதைவடையும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கண்டுபிடிப்பு பிரேத பரிசோதனைக்கு பின் மூளையின் விரைவான சிதைவு பற்றிய பரவலாக நிலவும் கருத்திற்கு முரணாக உள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட இந்த பழங்கால மாதிரிகள் நமது பரிணாம வரலாறு மற்றும் கடந்தகால நோய்கள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில் உயிரிழக்கும்போது மூளைதான் விரைவாக சிதையும் என்ற கருத்திற்கு முரணாக உள்ளதால் விஞ்ஞானிகள் மத்தியில் சிறிய குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது
"கண்டறியப்பட்ட பண்டைய காலத்து மூளைகள் புதிய மற்றும் தனித்துவமான பேலியோபயாலஜிக்கல் நுண்ணறிவுகளை வழங்கும். இது நரம்பியல் கோளாறுகள், பண்டைய அறிவாற்றல் மற்றும் நடத்தை மற்றும் நரம்பு திசுக்களின் பரிணாமம் மற்றும் அவற்றின் செயல்பாடுகளின் வரலாற்றை நன்கு புரிந்துகொள்ள உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.