பில்லூர் அணையிலிருந்து 12,000 கன அடி நீர் வெளியேற்றம்! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கக்கூடிய பில்லூர் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக உயர்ந்து வந்தது.
குறிப்பாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக இருக்கக்கூடிய கேரளா அட்டப்பாடி
மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை
பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுதல் பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக உயர்ந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்தது. இதன்படி, நேற்று நள்ளிரவு அணைக்கான நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இந்நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 97 அடி என்ற இலக்கை எட்டியது.
இதனையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நான்கு மதகுகள் வழியாக
12,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு! திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நோட்டீஸ்!
ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மேட்டுப்பாளையம், சிறுமுகை, வச்சினம்பளையம்,
லிங்காபுரம் உள்ளிட்ட கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.