12 சிறைவாசிகள் முன்விடுதலை - தமிழ்நாடு அரசு உத்தரவு!
பல ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 12 ஆயுள் தண்டனை கைதிகளை முன்விடுதலை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்.13-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். அதில், "பேரறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்த நாளான 2021-ம் ஆண்டு செப்.15-ம் தேதி நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்து நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்திட இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்" என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக ஆயுள்தண்டனை பெற்று 10 முதல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களின் தண்டனைகளை குறைத்து, அவர்களை முன்விடுதலை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திட 2022-ம் ஆண்டு ஜன.11-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் ஜாமின் மனு தள்ளுபடி….!!
இந்த நிலையில் அக்குழுவின் பரிந்துரையின்படி, கடலூர் மத்திய சிறையிலிருந்து 4 கைதிகளும், கோவை மத்திய சிறையிலிருந்து 6 கைதிகளும், வேலூர் மத்திய சிறையிலிருந்து ஒரு கைதியும், சென்னை புழல் சிறையிலிருந்து ஒரு கைதியும், என மொத்தம் 12 ஆயுள் தண்டனை கைதிகளை நிபந்தனையின் அடிப்படையில் முன்விடுதலை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.