"ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 இந்தியர்கள் உயிரிழப்பு, 16 பேர் மாயம்" - மத்திய அரசு தகவல்
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் எல்லைகளில் போரிடுவதற்கு ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக இந்தியர்கள் சிலர் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்துடன் இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ரஷ்ய ராணுவத்தில் இருந்து அனைத்து இந்தியர்களையும் விரைவில் வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே, சமீபத்தில் ரஷ்ய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட கேரளாவை சேர்ந்த நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ரஷ்ய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"ரஷ்ய ராணுவத்தில் 126 இந்தியர்கள் இணைந்து பணியாற்றி வருவதாக தெரியவந்துள்ளது. இதில் 96 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். மேலும், 18 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் உள்ளனர். அவர்களில் 16 பேர் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்காக போராடி சுமார் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்"
இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.