குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.12.50 லட்சம் நிதியுதவி - குவைத் அரசர் அறிவிப்பு!
குவைத் தீ விபத்தில் பலியான 46 இந்தியர்கள் உட்பட 50 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ12.50 லட்சம் நிதி உதவி வழங்க (15,000 அமெரிக்க டாலர்) அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கிருந்து 46 இந்தியர்களின் உடல்களும் விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் கேரளாவின் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விமானத்திலேயே மத்திய இணை அமைச்சர் கேவி சிங்கும் கொச்சி வந்தார். கொச்சி விமான நிலையத்தில் இருந்து உயிரிழந்தோரின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்களை தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக் கொண்டு 7 வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்திருந்தார்.
குவைத் தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, கேரளா அரசுகள் நிதி உதவிகளை அறிவித்திருந்தன. இந்நிலையில் குவைத் அரசும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.12.50 லட்சம் நிதி உதவி (15,000 அமெரிக்க டாலர்) வழங்கப்படும் என அறிவித்துள்ளது.