For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

20 ஆண்டுகளில் 115 மாணவர்கள் தற்கொலை.... மெட்ராஸ் ஐஐடியில் அதிகம்!

01:51 PM May 02, 2024 IST | Web Editor
20 ஆண்டுகளில் 115 மாணவர்கள் தற்கொலை     மெட்ராஸ் ஐஐடியில் அதிகம்
Advertisement

கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக  வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) 2005 முதல் 2024க்குள் 115 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவரும்,  குளோபல் ஐஐடி முன்னாள் மாணவர் குழுவின் நிறுவனருமான தீரஜ் சிங் தாக்கல் செய்த ஆர்டிஐ மூலம்  தெரிய வந்துள்ளது.  இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவற்றில் 98 இறப்புகள் கல்வி வளாகத்தில் நிகழ்ந்தவை.  இதில் 56 பேர் தூக்கிலிட்டு இறந்தனர். 17 பேர் வளாகத்திற்கு வெளியே இறந்துள்ளனர்.

அவர் தாக்கல் செய்த தரவுகளின்படி 2005 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்குள் மெட்ராஸில் ஐஐடியில் அதிகபட்சமாக 26 பேரும்,  கான்பூர் ஐஐடியில் 18 பேரும் இறந்துள்ளனர். கராக்பூரில் 13 பேரும்,  மும்பை ஐஐடியில் 10 பேரும் இறந்துள்ளனர்.  இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிப்ரவரி 12, 2023 அன்று மும்பை ஐஐடி மாணவர் தர்ஷன் சோலங்கியின் மரணம் தான் கடந்த 20 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஐஐடி மாணவர்களின் இறப்புகள் குறித்த தரவுகளைக் சேகரிக்க தீரஜ் சிங்கை தூண்டியுள்ளது.  இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது;

“மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் உயர்கல்வித் துறை,  ஆரம்பத்தில் எனது விண்ணப்பத்தை நிராகரித்து,  தனிப்பட்ட நிறுவனங்களுக்கு தனித்தனி ஆர்டிஐக்களை தாக்கல் செய்யச் சொன்னது.  மேல்முறையீட்டுக்குப் பிறகு,  தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைத்து ஐஐடிகளுக்கும் அமைச்சகம் அறிவுறுத்தியது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எனக்கு சில தரவுகள் கிடைத்தன.  தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள் உள்ளிட்ட பொது களத்தில் உள்ள நம்பகமான ஆதாரங்களில் இருந்து தரவுகளையும் நான் சேகரித்தேன்” என தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஐஐடி மாணவர் அமைப்புகள் இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.  இதில்  61% பேர் கல்வி மன அழுத்தம் காரணமாகவும்,  வேலை பாதுகாப்பின்மை (12%), குடும்ப பிரச்சினைகள் (10%) மற்றும் துன்புறுத்தல் (6%) ஆகியவற்றின் காரணமாக உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.  மேலும் பதினோரு சதவீத மாணவர்கள் 'பிற காரணங்கள்' என தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement