“திருநெல்வேலியில் கடந்த 3 ஆண்டுகளில் 1101 மைனர் பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது!” - சுகாதாரத்துறை
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 18 வயதுக்கு உட்பட்ட இளம் மைனர் பெண்கள் 1101 பேருக்கு பிரசவம் நடைபெற்றுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர் 18 வயதுக்குட்பட்ட இளம் மைனர் பெண்கள் கருவுற்று பிரசவம் நடைபெற்றிருப்பதன் விவரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சுகாதாரத்துறையிடம் சில கேள்விகளை முன்வைத்திருந்தார்.
அதற்கு சுகாதாரத்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர் நல சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் 18 வயதுக்குட்பட்ட இளம் மைனர் பெண்கள் 1101 பேர் கருவுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளன. இதில் 2021 ஆம் ஆண்டு 444 பேருக்கும், 2022 ஆம் ஆண்டு 383 பேருக்கும், 2023 ஆம் ஆண்டு 274 பேருக்கும் பிரசவம் நடந்துள்ளது.
பெண்ணின் திருமண வயது குறித்தும், பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் மைனர் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதோடு அவர்கள் தாயாகும் நிகழ்வுகளும் நடந்தேரிவருவது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகவே உள்ளது.