காவல்துறைக்கு 102 புதிய அறிவிப்புகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை தொடர்பான 102 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில்,
"சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகம், பெரம்பூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் புதிய புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
கோவை, சிவகங்கை, நெல்லை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் மாவட்டங்களில் புதிய காவல்நிலையங்கள் தொடங்கப்படும்.
விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மண்டலம் தொடங்கப்படும்.
கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும்.
தடய அறிவியல் துறையை நவீனப்படுத்த 50 நடமாடும் தடயவியல் வாகனங்கள் வழங்கப்படும்.
சார்பு ஆய்வாளர் தலைமையிலான 250 காவல்நிலையங்கள் ஆய்வாளர் தலைமையிலான காவல்நிலையங்களாக மாற்றப்படும்.
ஊட்டியில் 90 ஆயுதப்படை காவல் குடியிருப்புகள், தர்மபுரியில் 134 குடியிருப்புகள் கட்டப்படும்.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு கட்டப்படும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகரங்களில் காவல்துறை பயன்பாட்டிற்கு ரூ.12 கோடியில் 80 ரோந்து வாகனங்கள் வழங்கப்படும்.
ரூ.16 கோடியில் 7 இடங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்.
தீ விபத்து அதிகம் நடைபெறும் இடங்களில் தீயணைப்பு வாகனம் வாங்கப்படும்.
350 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும்.
ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும்,
சென்னை ஆயுதப்படையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்". இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.