நடமாடும் நூலகம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நடமாடும் கலைஞர் நூலகம் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் 1,000 பேர் வாசகர்களாக சேர்ந்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ‘கலைஞர் நூலகம்’ என்னும் நடமாடும் நூலகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நடமாடும் நூலகம் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதியில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் இந்த நூலகத்தில் திராவிட இயக்க வரலாறு, கலை, இலக்கியங்கள், போட்டித் தேர்வுகள் என பல்வேறு தலைப்புகளின் கீழ் 700 புத்தகங்கள் உள்ளன.
இதையும் படியுங்கள் : திமுக – காங். இடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தாகிறது!
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் தொகுதியில் கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நடமாடும் கலைஞர் நூலகத்தைத் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இந்த நூலகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், அரசுப் பணிக்குத் தயாராவோர், முதியவர்கள் என 1,000 பேர் வாசகர்களாக சேர்ந்து பயன்பெற்று வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.