பேஸ்புக், இன்ஸ்டா மூலம் தினமும் 1,00,000 குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்! வெளியான அதிர்ச்சித் தகவல்!
பேஸ்புக், இன்ஸ்டகிராம் மூலம் தினமும் 1,00,000 குழந்தைகள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுவது பெரும் பிரச்னையாக மாறி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அதிகரிக்கவே, அமெரிக்காவில் மெட்டா உள்ளிட்ட முன்னணி சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப் பதிவானது.
இந்த நிலையில் கடந்த மாதம் அமெரிக்க செனட் சபையில் அந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் மெட்டா, டிக் டாக், எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி வலைதள நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான காட்சி ஒளிபரப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களின் குழந்தைகளின் நிலையை எடுத்துரைத்தனர்.
மேலும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி நடவடிக்கை எடுக்க தவறியதற்காக நிறுவன அதிகாரிகளிடம் கேள்வி கேட்கப்பட்டது. மெட்டா நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டது. அச்சமயம் திடீரென பாதிக்கப்பட்ட குடும்பங்களை நோக்கி திரும்பிய மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் (Mark Zuckerberg), மன்னிப்பு கோரினார்.
மேலும் குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில், லாபம் ஈட்டும் நடவடிக்கைகளை இணையதளங்கள் மேற்கொள்ள அமெரிக்க செனட் சபை நீதிக்குழு அறிவுறுத்தியது. இந்த நிலையில் பேஸ்புக், இன்ஸ்டகிராம் மூலம் தினமும 1,00,000 குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்று மெட்டா ஆவணங்கள் காட்டுகின்றன.