கொரோனா தொற்றால் ஒரே மாதத்தில் 10,000 பேர் உயிரிழப்பு - உலக சுகாதார அமைப்பு தகவல்!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 10,000 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.
இதனிடையே, இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கும் இந்த உருமாறிய வைரஸ் தொற்றான ஜேஎன் 1 வைரஸே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 10,000 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: பொங்கல் பண்டிகை – சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.!
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரெஸ் அதனோம் கேப்ரியாசஸ் கூறியதாவது, "புதிய வகை கொரோனா தொற்றால் கடந்த மாதத்தில் மட்டும் 10,000 பேர் உயிரிழந்தனர். விடுமுறைக் காலத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடியதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனாவின் தீவிர பரவல் காலத்து மாதாந்திர சராசரி மரணங்களைவிட இது குறைவாக இருந்தாலும், தற்போதைய சூழலில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது ஏற்புடையது அல்ல" என்று தெரிவித்தார்.