1000 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தல் - முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்
1000 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாகக் கேட்டு கொடுமைப்படுத்துவதாகக் கூறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அவரது மகன் மற்றும் குடும்பத்தார் மீது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே.பி.கந்தன் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டும் சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்ட கே.பி.கந்தன், திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். இவரது மகன் கே.பி.கே.சதீஷ் குமார் சென்னை மாநகராட்சியின் 182-வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். சதீஷ் குமாருக்கு கடந்த 2018-ம் ஆண்டு அவரது குடும்பத்தார் வரண் தேடி வந்தபோது அம்பத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீகாந்த் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அதே ஆண்டு நுரையீரல் மருத்துவராக பணியாற்றி வந்த அவரது மகள் ஸ்ருதி பிரியதர்ஷினி என்பவருக்கும், கே.பி.கே.சதீஷ் குமாருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது ஸ்ருதி பிரியதர்ஷிணிக்கு அவரது குடும்பத்தார் சார்பில் 600 சவரன் தங்க நகைகள், 20 கிலோ வெள்ளிப் பொருட்கள், 2 சொகுசு கார்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ஸ்ருதி பிரியதர்ஷிணிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், சதீஷ் குமார் மற்றும் குடும்பத்தார் ஆண் வாரிசு பெற்றுக்கொடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி அவரை வீட்டில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விவாகரத்து கேட்டு சதீஷ் குமார், ஸ்ருதி பிரியதர்ஷிணிக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பின்னரும் தனது குடும்பத்தார் வரதட்சணையாக வழங்கிய நகைகள், சொகுசுக் கார் உள்ளிட்டவற்றை திருப்பி அளிக்காமல் அவர்களே பயன்படுத்தி வருவதாகவும் ஸ்ருதி தெரிவித்துள்ளார். பெற்ற பெண் குழந்தையைக் கூட பார்க்க விரும்பாமல் கூடுதலாக நகை கேட்டு கணவர் சதீஷ் குமார் கொடுமைப்படுத்துவதாகவும், சேர்ந்து வாழவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நடந்த எதையும் வெளியில் கூறாமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உடல் ரீதியான சித்ரவதைகள் தொடர்ந்தும், விஷயம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக, தன்னை மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகார்கள் தொடர்பாக போலீசார் விசாரணையை துவங்கியுள்ள நிலையில், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் குடும்பத்தார் 1000 சவரன் கேட்டு வரதட்சணைக் கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகார் மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.