தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள்... நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (பிப்.24) திறந்து வைக்கிறார். இவ்விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தக கடையையும் அவர் பார்வையிடுகிறார்.
இதையும் படியுங்கள் : ஜகபர் அலி கொலை வழக்கு – 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!
மேலும் பொதுமக்களிடம் மருந்தகம் தொடர்பாக பேச உள்ளார். முதல்வர் மருந்தகங்களில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 25% தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுவது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எழிலன், "மக்களுக்கான திட்டங்களை முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாளில் கூட தொடங்கி வைக்கலாம், அதில் தவறில்லை" என்று கூறினார்.
மேலும், அம்மா மருந்தகம் மூடப்படுவதற்கான வாய்ப்பில்லை எனவும், கூட்டுறவு மருந்தகம், அம்மா மருந்தகம், பிரதமர் மருந்தகம் ஆகியவற்றுடன் முதல்வர் மருந்தகம் ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.