அமெரிக்காவில் வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி - அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனக்கு சொந்தமான 'ட்ரூத்' சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"அமெரிக்காவில் திரைப்படத் துறை மிக வேகமாக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. மற்ற நாடுகள் நமது திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஸ்டுடியோக்களையும் அமெரிக்காவிலிருந்து விலக்க அனைத்து வகையான சலுகைகளையும் வழங்குகின்றன.
ஹாலிவுட் மற்றும் அமெரிக்காவிற்குள் உள்ள பல பகுதிகள் பேரழிவிற்கு உள்ளாகி வருகின்றன. இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாகும். அனைத்துக்கும் மேலாக இந்தப் படங்கள் பிரச்சார பாணியில் உள்ளன. எங்களுக்கு வேண்டியதெல்லாம் மீண்டும் அமெரிக்காவில் திரைப்படங்கள் எடுக்க வேண்டும்.
எனவே, வெளி நாடுகளில் தயாரிக்கப்பட்டு நமது நாட்டிற்குள் வரும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% வரி விதிக்கும் செயல்முறையை உடனடியாகத் தொடங்க வணிகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு நான் அங்கீகாரம் அளிக்கிறேன்" என டிரம்ப் கூறியுள்ளார்.