"பணமில்லாமல் திணறும் 100 கோடி இந்தியர்கள்" - கனிமொழி எம்.பி. பதிவு !
இந்தியாவில் 140 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள நிலையில் 100 கோடி பேர் விருப்பத்திற்கேற்ப செலவிடும் அளவுக்கு பணம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். நாட்டின் நுகர்வோர் பிரிவினர், ஸ்டார்ட் அப்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்களால் மதிப்பு மிக்க சந்தையாக பார்க்கப்படுகின்றனர்.
ஆனால், உண்மையில் மெக்சிகோவுக்கு இணையாக அதாவது 13 முதல் 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிக்கின்றனர் என Blume Ventures எனும் முதலீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறியுள்ளது.
இது தொடர்பாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"100 கோடி இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தவே போராடி வருகின்றனர். ஆனால் பாஜக மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் போன்ற அமைச்சர்கள் உண்மையான பிரச்சினைகளை சரிசெய்வதை விட, அதற்குப் பதிலாக கவனத்தை விலக வைக்கும் நடவடிக்கைகளை எடுத்துக் வருகிறார்கள்.
விலை வாசிகள் உயர்கின்றன, ஊதியங்கள் தேக்கமடைகின்றன, சமத்துவமின்மை சமுதாயத் தனிமை அதிகரிக்கின்றன. ஆனாலும் அரசாங்கத்தின் கவலை அதன் விருப்பமான நிறுவனங்களைப் பற்றி மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. இது "அமிர்த காலமா" அல்லது "விஐபி காலமா"? என்று பதிவிட்டுள்ளார்.