போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை: மக்களவை ஒப்புதல்!
அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நேற்று (பிப்.06) நிறைவேறியது.
பல்வேறு மாநிலங்களில் பொதுத் தேர்வு வினாத்தாள் கசிவது போன்ற முறைக்கேடுகள் நடந்த வண்ணம் உள்ளன. இத்தகைய முறைகேடுகளை தடுப்பதற்கு ஏற்கனவே குஜராத் போன்ற மாநிலங்களில் தனி சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது.
அதன்படி பொதுத் தேர்வுகளில் மோசடி செய்தால் 10 வருடம் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிப்பதற்குண்டான சட்டப்பிரிவுகளை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் திங்கட்கிழமை தாக்கல் செய்தார்.
நல்ல நோக்கத்துடன் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இதனால் எந்த சிக்கலும் இல்லை என்றும் கூட்டாக சேர்ந்து தேர்வுகளில் மோசடி செய்பவர்களை தண்டிக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் மசோதாவின் கீழ் அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து தேர்வுத் தாள்களை கசியவிடுதல் அல்லது விடைத்தாள்களை சிதைப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும்.