தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை - ரூ.1 கோடி அபராதம்!
நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, பொதுத்தேர்வுகள் - நேர்மையற்ற வழிமுறைகளை தடுத்தல் சட்டத்தை, மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நீட் தேர்வுகளில் ஏராளமான முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 6 பேர் ஒரே மதிப்பெண் எடுத்திருப்பது மற்றும் மாணவர்களுக்கு வெவ்வேறு வினாத் தாள்கள் வழங்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய தேர்வு முகமை இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில், அடுத்த அதிர்ச்சியாக யுஜிசி நெட் தேர்வுகளில் முறைகேடுகள் ஏற்பட்டதால் அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசியல்ரீதியாக மிகப்பெரிய பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பொதுத்தேர்வுகளின் நேர்மையற்ற வழிமுறைகளை தடுத்தல் சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். நாடு முழுவதும் தற்போது பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், அதிரடியாக இந்த சட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.