#China-வில் 10 வயது ஜப்பானிய மாணவன் கத்தியால் குத்திக்கொலை - இருநாடுகளிடையே அதிகரிக்கும் பதற்றம்!
சீனாவில் 10 வயது ஜப்பானிய மாணவன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், இரு நாடுகளுக்கிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தெற்கு நகரமான ஷென்செனில் உள்ள ஜப்பானிய பள்ளியின் வாயில் அருகே, 10 வயது சிறுவன் கடந்த 18-ம் தேதி மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டான். உடனே அருகில் இருந்தவர்கள் அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்தார்.
இதனையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 44 வயது நபரை ஷென்சென் போலீசார் கைது செய்தனர். அவர் இதற்கு முன்னரே இரண்டுமுறை காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறியதாவது;
எந்தவொரு முன்னறிவிப்பு செய்வதையும் தவிர்க்கிறேன். சீனாவில் உள்ள ஜப்பானிய மக்களின் பாதுகாப்பை சீனா உறுதி செய்ய வேண்டும். இந்த கொலைசம்பவத்தின் உண்மை பின்னணியை சீனா விளக்க வேண்டும். சீனா உடனடியாக பதிலளிக்க வலியுறுத்துகிறேன். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது” என தெரிவித்தார்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் எனக் கூறினார். மேலும் சிறுவனின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்தார். இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சீனாவில் உள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய பயனுள்ள நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த சம்பவம் சீனா மற்றும் ஜப்பானின் உறவை பாதிக்காது என நம்புகிறேன் எனக் கூறினார்.