10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 15 வயது சிறுவன் மீது பாய்ந்த போக்சோ - சென்னையில் அதிர்ச்சி!
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் மாலதி (34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வருகிறார். முதல் கணவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு 10 வயது ஆகிறது. அவர் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாலதியின் 2 மகள்களும் அவரின் முதல் கணவரின் அக்கா வீட்டில் தங்கி படித்து வந்தனர். மாலதியின் முதல் கணவரின் அக்காவிற்கு 15 வயதில் மகன் உள்ளார். இவரும் அதே வீட்டில் வசித்து வந்த சூழலில் மாலதியின் 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த நிலையில் சிறுமிக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்தார்.இதுகுறித்து அறிந்த மாலதி எம்.கே பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.