"சிந்துவெளி எழுத்து முறையை புரியவைத்தால் 1 மில்லியன் டாலர் பரிசு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !
சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை புரிந்துகொள்ள உதவ வழிவகை செய்யும் நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 'சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு' நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு இன்று முதல் ஜனவரி 7ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக கலையரங்கில் நடைபெற்ற கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பினை உலகுக்கு அறிவித்த முன்னாள் இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் திருவுருச்சிலைக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டு குறியீடுகளும், ஒரு வடிவவியல் ஆய்வு என்ற நூலினை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
“தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு. சிந்துவெளி பண்பாடு தொடர்பான கருத்தரங்கு இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறவில்லை. சிந்துவெளி நாகரீகத்தில் திராவிட மொழி பேசப்பட்டிருக்காலம் என கூறப்பட்டது. சிந்துவெளி நாகரீகம் முதன் முதலில் 1924-ம் ஆண்டு உலகுக்கு அறிவிக்கப்பட்டது.
சிந்துசமவெளி நாகரீகத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் சர் ஜான் மார்ஷல். 1948-ம் ஆண்டு காலத்தில் சிந்துவெளி அடையாளங்களை வெளிகொண்டு வந்தவர் அண்ணா. செம்மொழி மாநாட்டில் சிந்துவெளி நாகரீகத்தை அடையாளப்படுத்தியவர் கருணாநிதி. சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு உலகை ஈர்த்துள்ளது. கீழடியைப் போலவே பொருணையிலும் அருங்காட்சியக பணிகள் நடைபெற்று வருகின்றன. சிந்துவெளி அகழ்வாராய்ச்சி பணிகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. சிந்துவெளி குறியீடுகளும், கீழடி குறியீடுகளும் 60 சதவீதம் ஒத்துப்போகின்றன.
சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழிவகையை கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும். கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 24 ஆய்வாளர்கள், தொல்லியலாளர்கள் சிந்துவெளி நாகரிகம் மற்றும் இந்திய துணை கண்டத்தின் இதர நாகரிகங்கள், பண்பாடுகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் தங்களது ஆய்வுரைகளை வழங்க உள்ளனர். மேலும் அனைத்து நிகழ்வுகளும் பொதுமக்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் நேரலையில் ஒளிப்பரப்பப்பட உள்ளன.