சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.03 லட்சம் பறிமுதல்!
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நிலையில், சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட 1 லட்சத்து மூவாயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.
அதன்படி முறையான ஆவணங்கள் இன்றி ரூ.50,000 -க்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது என்றும், அவ்வாறு எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வட்டாட்சியர் பாபு தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சங்கரன்கோவில்-திருநெல்வேலி சாலையில் ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த இனோவா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் சென்ற விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வேலாயுதபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகச்சாமியிடம் உரிய ஆவணங்களின்றி ஒரு லட்சத்து 3500 ரூபாய் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அப்பணத்தை பறிமுதல் செய்தனர்.