அயோத்தி கோயிலுக்கு 1.75 கிலோ எடையில் வெள்ளி துடைப்பம்!
அயோத்தி கோயிலுக்கு 'அகில் பாரதிய மங் சமாஜ்' என்ற அமைப்பைச் சேர்ந்த ராம பக்தர்கள், வெள்ளி துடைப்பம் ஒன்றைக் காணிக்கையாக அளித்துள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை ஜன.22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஜன.23-ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டனர். ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டி அயோத்தி ராமர் கோயிலுக்கு 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி, 1,265 கிலோ எடையுள்ள பிரமாண்ட லட்டு உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது?
இந்நிலையில், 'அகில் பாரதிய மங் சமாஜ்' என்ற அமைப்பைச் சேர்ந்த ராம பக்தர்கள், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வெள்ளி துடைப்பம் ஒன்றைக் காணிக்கையாக அளித்துள்ளனர். இந்த வெள்ளி துடைப்பம் 1.751 கிலோ எடை கொண்டது. மேலும் இதன் மேல் பகுதியில் வெள்ளியாலான லட்சுமி தேவியின் உருவம் உள்ளது.
இந்தத் துடைப்பத்தைச் செய்து முடிக்க 11 நாட்கள் ஆனதாகவும், 1.751 கிலோ எடை கொண்ட இந்தத் துடைப்பம் 108 வெள்ளிக் குச்சிகளைக் கொண்டதாகவும் அதில் பாரதிய மங் சமாஜ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துடைப்பத்தை கர்ப்பக்கிரகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.