கர்நாடக அணைகளில் இருந்து 1.30 லட்சம் கன அடி நீர்திறப்பு!
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 1.30 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு காவிரி ஆற்றில் இரண்டு அணைகளிலும் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறது. அந்த வகையில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.
இந்த இரண்டு அணைகளிலிருந்தும் மொத்தமாக 1 லட்சத்து 30,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. ஹேமாவதி அணையில் இருந்து 77,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. வயநாடு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் கபினி அணைக்கான நீர்வரத்து 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது.