ஸ்பெயினில் இருந்து ₹3,440 கோடி முதலீடு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் சுற்றுப்பயணம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், புதிய நிறுவனங்களை வரவேற்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன. 27ஆம் தேதி ஸ்பெயின் புறப் பட்டுச் சென்றார். அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.
பிறகு நடைபெற்ற சந்திப்புகளின்போது, பிரபலமான ஹபக்லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸின் பன்னாட்டு மற்றும் நிறுவனத் தொடர்பு தலைமை அதிகாரி லாரா பெர்ஜானோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
அப்போது, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ள அபர்ட்டிஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. ஆக்சியானா நிறுவனமும் முதலீடு செய்ய உறுதி அளித்தது. தொடர்ந்து, அம்போவால்வ்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிறுவனங்களும் விரைவில் ஒப் பந்தம் மேற்கொள்ள உள்ளன. ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"தொழில்துறை வரலாறு காணாத மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது. உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.6.6 லட்சம் கோடிக்காண முதலீடு ஏற்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பல நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். தற்போது ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு வந்தார்.
மொத்தம் ரூ.3,440 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டின் முதலீடுகளை ஈர்க்க சென்ற பயணம் வெற்றிகரமாக முடிவடைந்தது. தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.