ராமதாஸ் மீதான வழக்கு - விளக்குத்தூண் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு!
கடந்த 2004ஆம் ஆண்டு மதுரையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். பிரச்சாரத்தின் போது ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த நபர்கள் ராமதாஸிற்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ரஜினி ரசிகர்கள் பலர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் கூறியதால் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள், அவர்களை தாக்கியதாக பொய்யான புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், விளக்குத்தூண் காவல் ஆய்வாளர், மற்றும் புகார்தாரர் தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.