மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் வரும் 16-ம் தேதி வரை ரத்து!
மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து மழை காரணமாக வரும் 16-ம் தேதி வரை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வார காலமாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலை ரயில் பாதையில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மலை ரயில் பாதை அமைந்துள்ள கல்லார், ஆடர்லி, ஹில்கிரோ உள்ளிட்ட பகுதிகளில் தொடர் பருவ மழை காரணமாக நேற்று மண்சரிவு ஏற்பட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சென்ற ரயில் கல்லாரிலேயே நிறுத்த பட்டு திருப்பி அனுப்பிவைக்கபட்டு நேற்று ஒரு நாள் முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து சேதமடைந்த ரயில் பாதையை ரயில்வே ஊழியர்கள் சீரமைத்து வந்தனர். இருப்பினும் பணிகள் முழுமையடையவில்லை அதே சமயத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 16 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூபி.காமராஜ்