பண்ருட்டி| தனியாருக்கு சொந்தமான கேக் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து!
பண்ருட்டி அருகே தனியாருக்கு சொந்தமான கேக் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சூரக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தரணி (54). இவருக்கு சொந்தமான மணிலா என்ற கேக் தொழிற்சாலை அப்பகுதியில் இயங்கி வருகிறது. தரணி தொழிற்சாலையில் வழக்கம்போல் பணி முடிந்து மூடிவிட்டு சென்றார். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென்று தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் கொழுந்து விட்டு எரிய தொடங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பண்ருட்டி தீயணைப்பு நிலையத்திற்கும், தொழிற்சாலை உரிமையாளர் தரணிக்கும் தகவல் தெரிவித்தனர். அத்தகவலை அறிந்த பண்ருட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் கேக் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம் ஆனது என்பது தெரிய வந்தது. தீ விபத்து குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதை விசாரணை செய்து வருகின்றனர்.