"திருச்செந்தூர் கோயிலுக்கு வரவேண்டாம்" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
கனமழை காரணமாக திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் தேங்கியுள்ள நீர் 100 கிராமங்களை சூழ்ந்தது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், ஐயப்ப சுவாமி பக்தர்களும் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் திருச்செந்தூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பக்தர்கள் நனைந்தபடியே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆபத்தான நிலையில் தூத்துக்குடி இருப்பதால் இன்றும் நாளையும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என பக்தர்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.