சிவகங்கையில் மீண்டும் கார்த்தி சிதம்பரம், திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில்! காங். வேட்பாளர்கள் முதற்பட்டியல்!
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது...
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலை தேசிய அளவில் பாஜக தலைமையிலான கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுகின்றன.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்தக் கூட்டணியில் புதுச்சேரியை சேர்த்து 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில் புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் போட்டியிடுவார் என இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு
1. திருவள்ளூர் (தனி) - சசிகாந்த் செந்தில்
2. கிருஷ்ணகிரி - கே கோபிநாத்
3. கரூர் - ஜோதிமணி
4. கடலூர் - விஷ்ணு பிரசாத்
5 சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்
6. விருதுநகர் - மாணிக்கம் தாக்கூர்
7. கன்னியாகுமரி - விஜய் வசந்த்
மேலும் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது.