காரைக்குடியில் கொட்டும் மழை - சீரமைப்பு பணியில் துணை மேயர்!
காரைக்குடியில் தொடர் மழையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதிகளில் துணை மேயர் குணசேகரன் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டகளுக்கு தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது.
இதனைத் தொடர்ந்து காரைக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பின்னர் புகார்கள் வந்த நிலையில் அதை ஏற்று காரைக்குடி மாநகராட்சி துணை மேயர் குணசேகரன் மற்றும் தேவகோட்டை சப் கலெக்டர், சித்ரா வட்டாட்சியர் ராஜா உள்ளிட்டோர் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழை நீரை மின் பம்பு செட் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி மற்றும் சீரமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.