கஷ்டங்கள் தீர ஒரு நெற்கதிர் போதும்! சபரிமலை இன்று மாலை திறக்கிறது - அற்புதம் நிகழும் நிறை புத்தரிசி பூஜை!
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருடாந்திர நிறை புத்தரிசி பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
ஐயப்ப பக்தர்களுக்கு மிக முக்கியமான ஒரு சடங்காக கருதப்படும் இந்தப் பூஜை, புதிய அறுவடை காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
இன்று மாலை 5 மணிக்கு, கோவிலின் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையைத் திறந்து வைப்பார். இதனையடுத்து, நாளை (புதன்கிழமை) நிறை புத்தரிசி பூஜைகள் விமரிசையாக நடைபெறும்.
இந்தப் பூஜைகளுக்காக, பாரம்பரிய முறைப்படி பாலக்காடு மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களில் இருந்து அய்யப்ப சேவா சங்கத்தினர் நெற்கதிர் கட்டுகளை தலைச்சுமையாக சுமந்து சபரிமலைக்குக் கொண்டு வருவார்கள். இந்த நெற்கதிர்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
இதனை தொடர்ந்து பூஜை முடிந்ததும், இந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த நெற்கதிர்களை வீடுகளில் வைத்து பாதுகாத்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும், நோய் நொடிகள் விலகும், விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
மேலும் நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகள் நிறைவுற்றதும், நாளை இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். பின்னர், ஆவணி மாத பூஜைக்காக கோவில் நடை மீண்டும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.