ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜர்!
ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ், சென்னையில் உள்ள மாநில பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
வேலூரை தலைமையிடமாக கொண்ட ஆருத்ரா நிதி நிறுவனம், சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கிளைகளை கொண்டிருந்தது. இந் நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி மக்களை ஏமாற்றியது. இந்த நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்பால் மயங்கிய அப்பாவி மக்கள், ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், ஆருத்ரா நிறுவனம், வட்டியும் வழங்காமல், அசலும் வழங்காமல் மோசடி செய்தது அம்பலமானது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்ற விசாரணை மற்றும் சோதனைகளால், ஆருத்ரா கோல்டு நிறுவனம் சுமார் சுமார் ரூ.2,438 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்நிறுவன உரிமையாளர்கள், அதில் கடன் வாங்கியவர் என சுமார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணைகளைத் தொடர்ந்து, இம்மோசடி தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் இந்நிறுவன அதிபர் ராஜசேகர் மற்றும், இந்நிறுவனத்தில் கோடிகணக்கில் பணம் வாங்கிவிட்டு, அதை முறையாக கட்டாத திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ் உள்பட சிலர் தலைமறைவாகினர். இவர்கள் துபாயில் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது.
நடிகர் ஆர்.கே.சுரேஷ், காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால், ஆஜராகாத நிலையில், அவரது வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீசும் அனுப்பட்டது. இதை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், லுக்அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. வழக்கின் விசாரணையின்போது, ஆர்.கே.சுரேஷ் தரப்பில், நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதாக உறுதி அளிக்கப்பட்டது.
மேலும், ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ராஜகேசர் துபாயில் கைது செய்யப்பட்டார். அவரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் செல்கின்றனர். துபாய் நீதிமன்ற அனுமதியுடன் சென்னைக்கு அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் சென்றுள்ள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன் துபாயில் இருந்து சென்னை வந்த நடிகர் ஆர்.கே சுரேஷ் விமான நிலையத்தில் வைத்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினார். அப்போது நீதிமன்ற உத்தரவின்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஆஜராக வந்திருப்பதாக அவர்களிடம் ஆர்கே சுரேஷ் தெரிவித்தார். பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல குடியுரிமை அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
இந்த நிலையில், தற்போது மாநில பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், தான் தலைமறைவாகவில்லை என்றும் விசாரணைக்குப் பின் செய்தியாளர்களை சந்திப்பேன் என்றும் கூறினார்.