ஆந்திராவில் மீண்டும் ‘அண்ணா’ உணவகங்கள் - தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய தெலுங்கு தேசம் கட்சி!
தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து ஆந்திராவில் ஆங்காங்கே 5 ரூபாய்க்கு
உணவு வழங்கும் அண்ணா ( என்.டி.ஆர்) உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் அம்மா உணவகங்கள் செயல்படுவது போல், ஆந்திராவில் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அண்ணா உணவகங்களை அப்போதைய தெலுங்கு தேசம் கட்சி அரசு நிர்வாகித்து வந்தது. தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவருடைய கட்சி தலைவர்கள் தொண்டர்கள் ‘அம்மா’ என்று அழைத்தது போல், ஆந்திராவில் என்டி ராமராவை அவருடைய தொண்டர்கள் ‘அண்ணா’ என்று அழைத்து வந்தனர்.
எனவே தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி காலத்தில் அக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு துவக்கிய மலிவு விலை உணவகங்களுக்கு என்.டி.ராமராவை குறிப்பிடும் வகையில் அண்ணா உணவகங்கள் என்று பெயரிடப்பட்டன. இந்த உணவகங்களில் 5 ரூபாய்க்கு பல்வேறு வகையான கலவை சாதங்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. அம்மா உணவகங்களுக்கு இருந்தது போன்ற வரவேற்பு ஆந்திராவில் அண்ணா உணவகங்களுக்கும் இருந்துவந்தது.
இதனிடையே, 2019-ம் ஆண்டு ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை இழந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசு அண்ணா உணவகங்களை மூடிவிட்டது. இந்நிலையில் நடந்துமுடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தால் மீண்டும் அண்ணா உணவகங்கள் திறக்கப்படும் என்று தெலுங்கு தேசம் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
அதன் அடிப்படையில் ஆந்திராவில் மீண்டும் அண்ணா உணகங்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆந்திரா முழுவதும் சுமார் 190 அண்ணா உணவகங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்தாண்டு காலத்திற்குப் பின் மீண்டும் அண்ணா உணவகங்களுக்கு பொதுமக்கள் சென்று உணவருந்தி வருகின்றனர். அதிகரித்திருக்கும் விலைவாசியில் ஐந்து ரூபாய்க்கே விற்பனை செய்யப்படும் கலவை சாதங்கள், இட்லி, பொங்கல், உப்புமா ஆகியவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர்.