டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் வரும் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இத்தேர்தலில் ஆட்சியை பிடிக்க ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. அதே போல் அந்ததந்த கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர்கள் தங்கள் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பிரச்சாரத்தின்போது பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் இடையே அவ்வப்போது மோதல் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து 8 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்தனர். இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துள்ளது.