ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள்: முதல்வர் ஆறுதல், ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!
சீர்காழி அருகே உள்ள அகரஎலத்தூர் கிராமம், பனங்காட்டங்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று மாலை நிகழ்ந்த இந்த துயர சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மயிலாடுதுறை மாவட்டம், பட்டமங்கல ஆராயத் தெருவைச் சேர்ந்த அருண்சங்கர் (22) மற்றும் சீர்காழி வட்டம், கொண்டல் கிராமத்தைச் சேர்ந்த சிபிராஜ் (21) ஆகிய இருவரும் நேற்று (திங்கட்கிழமை) மாலை சீர்காழி, பனங்காட்டங்குடி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இந்தத் துயரமான சம்பவத்தில், உயிரிழந்த அருண்சங்கர் மற்றும் சிபிராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்தத் துயரமான நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.