நீட் தேர்வுக்கு மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்! - கால அவகாசத்தை நீட்டித்து என்.டி.ஏ அறிவிப்பு
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், ஹோமியோபதி உட்பட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கும் தேசிய அளவில் நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது.
இந்த தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள், மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் ஆவர். அவர்களே மருத்துவ கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர். நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், கலந்தாய்வின்போது மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும்.
இதையும் படியுங்கள் : “40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” - தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 16-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மார்ச் 16-ம் தேதி இரவு 10.50 மணி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இரவு 11.50 மணி வரை அதற்கான கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கு பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் என்.டி.ஏ எச்சரித்துள்ளது.