10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 24-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வால், தமிழ்நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 25ம் தேதி வரை பரவலாக மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.