#INDIA கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர் யெச்சூரி - படத் திறப்பு விழாவில் முதலமைச்சர் #MKStalin பேச்சு!
இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் சீதாராம் யெச்சூரி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரியின் பட திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் இன்று (23.09.2024) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஆசிரியர் கி.வீரமணி, பத்திரிகையாளர் என்.ராம் மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான சீத்தாராமன் யெச்சூரியின் இறப்பு என்னை அதிர்ச்சி அடைய செய்தது. சீத்தாராமன் யெச்சூரி எப்போதுமே சிரித்த முகத்துடன் தான் இருப்பார். யெச்சூரி இளைய சமூகத்தின் வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி என்கிற ஒரு கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் யெச்சூரி.
யெச்சூரியின் தமிழ்ப்பற்று, நகைச்சுவை உணர்வு சிறப்பானது. தனிப்பட்ட முறையில் என் மீது அளவுக்கடந்த பாசம் வைத்தவர் அவர். சீதாராம் யெச்சூரி சிபிஎம்க்கு மட்டுமல்ல அனைவருக்கும் சொந்தமானவர். தமிழ்நாட்டில் எனக்கு பங்கு உண்டு என உலகத்தமிழர் மாநாட்டில் அவர் பேசினார். கலைஞர் இல்லாமல் தமிழ்நாடு இல்லை என அவர் பேசியது மறக்க முடியாத நிகழ்வு.
கூட்டணி கட்சியினரிடையே முரண்பாடுகள் இருந்தாலும் பாஜகவை விழ்த்த வேண்டும் என தீர்க்கமாக கூறியவர் அவர். சீதாராமன் யெச்சூரி விட்டுச்சென்ற பணிகளை நாம் தொடர வேண்டும். அவர் நினைத்த மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும். சகோதரத்துவம் மிக்க இந்தியாவை உருவாக்க வேண்டும். சமூக நீதி இந்தியாவை உருவாக்க வேண்டும் இவை அடங்கிய சமதர்ம இந்தியாவை உருவாக்க வேண்டும். அதற்காக நாம் உறுதியேற்போம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.