Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வினேஷ் போகத் தகுதிநீக்கம் ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்!

04:25 PM Aug 07, 2024 IST | Web Editor
Advertisement

ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

33வது ஒலிம்பிக் போட்டியில், நேற்று (ஆக. 7) நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை உள்பட 3 பேரை முறியடித்த வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

இன்று இறுதிச்சுற்றில் விளையாட இருந்த நிலையில் வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். எனவே இந்த பிரிவில் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. வெள்ளிப்பதக்கம் யாருக்கும் அளிக்கப்படவில்லை.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் இன்று விளக்கம் அளித்தார். நாடாளுமன்ற மக்களவையில் இதுகுறித்து பேசிய அவர், "இன்று அவரது எடை 50 கிலோ 100 கிராம் என கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தகுதி நீக்கம் குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத்துக்கு சிறந்த பயிற்சியாளர், ஆலோசகரை கொடுத்துள்ளோம்.

இந்த விவகாரத்தில் உலக மல்யுத்த கூட்டமைப்பிடம் (UWW) இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா பாரிஸில் இருக்கிறார். பிரதமர் அவரிடம் பேசி, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தனிப்பட்ட பணியாளர்கள் உட்பட அவருக்கு அனைத்து வசதிகளையும் அரசு வழங்கியது. வினேஷ் போகத்துக்கு தேவைப்பட்டால் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து, வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அமைச்சரிடம் விளக்கம் கேட்டனர். இந்நிலையில் அமைச்சர் விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறி, எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

Tags :
Mansukh MandaviyaNarendra modiNews7Tamilnews7TamilUpdatesOlympics 2024ParisParis 2024Paris 2024 OlympicParis Olympics 2024Vinesh PhogatWrestling
Advertisement
Next Article