உலக ராபிட் செஸ் போட்டி | சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி!
உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடிய கொனேரு ஹம்பி 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார். இந்த வெற்றியின் மூலம் சீனாவின் ஜூ வென்ஜூனுக்கு பிறகு அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் கொனேரு ஹம்பி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
முன்னதாக 2019-ம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் குகேஷ் சீனாவின் டிங் லிரனை தோற்கடித்து சாம்பியனாக வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து தற்போது ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கொனேரு ஹம்பி சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 2012-ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ராபிட் செஸ் உலக தொடரில் கொனேரு ஹம்பி வெண்கல பதக்கம் வென்று இருந்தார். மேலும், கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இருந்தார்.