உலக செவிலியர் தினம் - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து!
உலக செவிலியர் தினத்தையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
"ஃபுளோரென்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளை, ஆண்டுதோறும் செவிலியர் நாளாகக் கொண்டாடுகின்றார்கள். உலகம் முழுமையும் இருக்கின்ற செவிலியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
200 ஆண்டுகளுக்கு முன்பு, 1820 மே 12 ஆம் நாள் இங்கிலாந்து நாட்டின் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த ஃபுளோரென்ஸ் நைட்டிங்கேல், தம்முடைய வாழ்க்கையை, செவிலியர் பணிக்கு ஒப்படைத்துக் கொண்டார். செவிலியர் பணிக்கான வழிகாட்டு நெறிகளை வகுத்தார். அறத்தொண்டுகளில் ஆர்வம் கொண்ட பெண்களைச் சேர்த்து, செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார்.
நோயாளிகளைக் காப்பாற்ற ஒரு பக்கம் மருந்து இருந்தால் மட்டும் பயன் இல்லை. அந்த நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளின் தன்மை அறிந்து, இடம் அறிந்து, காலம் அறிந்து அவர்களைத் தேற்றும் கடமை ஆற்றுவதற்கு, எல்லையற்ற பொறுமை வேண்டும். தாய் உள்ளம் வேண்டும். அத்தகைய தாய்க்கு ஈடானவர்கள் செவிலியர்கள். தற்போது ஆண் செவிலியர்களும் களப்பணி ஆற்றி வருகின்றார்கள்.
புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு இருக்கின்ற அணைவருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் நெஞ்சம் நிறைந்த செவிலியர் நாள் வாழ்த்துகளை உரித்தாக்குகின்றேன்" என்று கூறப்பட்டுள்ளது.