உலகக்கோப்பை கிரிக்கெட் நிறைவு விழா - இந்திய விமானப்படையின் வான் சாகசம்!
ஐசிசி உலகக்கோப்பை 2023 நிறைவு விழாவில் இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பைப் தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்று இந்தியா அசைக்க முடியாத அணியாக உள்ளது.
இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், நேற்று முந்தினம் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்து வெளியேறும் தென்னாப்பிரிக்காவின் நிலை மீண்டும் தொடர் கதையாகியுள்ளது. அகமதாபாத்தில் நாளை நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இது தொடர்பாக குஜராத் மண்டல பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய விமானப்படையின் 9 விமானங்கள் அடங்கிய சூர்ய கிரண் குழு, வான் சாகச நிகழ்ச்சிக்கு நேற்று ஒத்திகை மேற்கொண்டது. இன்றும் ஒத்திகை நடைபெறும். இறுதி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு 10 நிமிடங்களுக்கு வான் சாகச நிகழ்ச்சி நடைபெறும்’ இவ்வாறு தெரிவித்தார்.